Saturday, October 2, 2021

ரசிகர்களின் அரசியல் ஆசைக்கு பச்சைக்கொடி காட்டிய விஜய்


 தமிழகத்தில்  9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம்  போட்டியிட இருக்கிறது. விஜய்யின் புகைப்படம் மற்றும் மக்கள் இயக்க கொடியை பயன்படுத்தி சுயேட்சையாக மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிட உள்ளனர். இதற்கான முடிவு   பனையூரில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடலாம் என்று நடிகர் விஜய் கொடுத்த அனுமதியின் பெயரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் விஜய் நேரடியாக எங்கும் பிரச்சாரங்கள் செய்ய மாட்டார், அரசியலில் ஈடுபட மாட்டார். புகைப்படம், கொடியை பிரச்சாரத்தில் பயன்படுத்த மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அரசியலுக்கு நேரடியாக களம் இறங்காமல் ரசிகர்களின் விருப்பத்துக்காக  அரசியலுக்கு அனுமதியளித்துள்ளார்.

பலமான வாக்கு வங்கி உள்ள கட்சிகள்  தனித்தனியாகப் போட்டியிடு தேர்தலில் விஜயின் ரசிகர்களின் வெற்றி என்பது  கேள்விக்குறியே.செல்வாக்குள்ள இரன்டொருவர் சில இடங்கலில் வெற்றி பெறலாம். ஆனால், எந்த ஒரு சபையையும் கைப்பற்றக்கூடிய  வாக்கு பலம் விஜயையுடைய  இயக்கத்துக்கு இல்லை. தகப்பன் அரசியலுக்கு வராதபோது மறுத்த விஜய், ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிறார்.

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய். அவருக்கு தமிழில் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலும் ரசிகர் பட்டாளம் உள்ளது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் இருக்கும் போது விஜயை அரசியலில் முன்னிறுத்துவதற்கு தகப்பன் சந்திரசேகரன் முயன்றார். அதற்கு விஜய்  ஒப்புக்கொள்ளவில்லை. விஜயின் சில படங்கள் வெளியாவதற்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா தடையாக இருந்தார்.

ஜெயலலிதாவும், கருணாநிதியும் இறந்த பின்னர் தமிழக அரசியலில் வெற்ரிடம் இருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்தனர். அப்போது அரசியலுக்கு வரப்போவதாக  பகிரங்கமாக அறிவித்த ரஜினி பின்னர் அரசியலுக்கு முழுக்குப் போடுவதாகத் தெரிவித்தார். ரசிகர்களின் செல்வாக்கு விஜய்க்கு இருப்பதால் அவருக்கான‌ அரசியல் வேலைகளை சந்திரசேகரன்  ஆரம்பித்தார். இதனால் விஜயின் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது.

விஜயுடைய  பெயருக்கு செல்வாக்கு இருக்கு என்பதை உணர்ந்த தகப்பன் சந்திரசேகரன்கடந்த வருடம் விஜயின் ரசிகர்களை வைத்து அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்கிற கட்சி தொடங்கப்பட உள்ளதாகவும், இதன் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், பொருளாளராக தாயார் ஷோபா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. அதோடு இதை கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் விஜய் தரப்பில் இதற்கு கடுமையான மறுப்பு தெரிவிக்கப்பட்டது.


கடந்த ஆண்டு நவம்பரில் இந்த செய்தி தீயாய் பரவிய நிலையில், கட்சியை பதிவு செய்த தகவல் தவறானது என விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தனக்கும் இதற்கும் தொடர்பே இல்லை என்று விஜய் தரப்பில் கூறப்பட்டது. அதன்பின் சில மேடைகளில் எனக்கும் என் மகனுக்கும் பிரச்சனை இருக்கிறது. நாங்கள் பேசிக்கொள்வது கிடையாது. எங்கள் குடும்ப பிரச்சனை இது என்று எஸ்.ஏ. சந்திரசேகர் சில மேடைகளில் விஜய் குறித்து வெளிப்படையாக பேசி சர்ச்சைகளில் சிக்கினார்.

சந்திரசேகரனின் அரிவிப்பால் உஷாரான விஜய் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தார்.  தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி விஜய் வழக்கு தொடுத்தார். தனது பெயரை வைத்து தேவையின்றி அரசியல் கட்சிகள் தொடங்கப்படுவதை விரும்பாமல் விஜய் இப்படி வழக்கு தொடுத்து இருந்தார். சென்னை நகர 5வது உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் சார்பாக கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது.

நடிகர் சி. ஜோசப் விஜய் என்ற பெயரில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில் சங்கங்களின் பதிவாளர், தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் எஸ்.ஜெ.ஜெகன், முன்னாள் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார், முத்து, விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர் கே.பாரதிதாசன், இன்பண்ட் யோகராஜ், எஸ்.ஏ.சந்திரசேகரின் உறவினரும், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் ஆர். பத்மனாபன், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் பொதுச் செயலாளரன எஸ்.ஏ.சந்திரசேகர் (தந்தை), அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொருளாளர் ஷோபா சேகர் (தாய்), தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் கே. ஜோஸ்பிரபு, மதுரை மாவட்ட இளைஞர் அணித் தலைவர் முனிச்சாலை ஆர்.மகேஸ்வரன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்படுவதாக   இயக்குனர் சந்திரசேகர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். இது வேறொரு சர்ச்சைக்கு வழி வகுத்தது. இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாக சந்திசேகர் தரப்பு நீதிமன்றத்தில்  தெரிவித்தது. பெப்ரவரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்த இயக்கத்தை கலைத்துவிட்டோம் என்று எஸ்.ஏ சந்திரசேகர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பே இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

இது விஜய் ரசிகர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. தேர்தல் தேர்தலுக்கு மனு எல்லாம் தாக்கல் செய்து விட்டோம்.. இப்போது போய் மக்கள் இயக்கம் இல்லை என்று கூறினால் என்ன நியாயம் என்று பலர் குழப்பம் அடைந்தனர். இதையடுத்து விஜய் தரப்பில் அவசர அவசரமாக இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில், விஜய் மக்கள் இயக்கம் இப்போதும் இருக்கிறது. நான் தொடங்கிய இயக்கத்தை யாரும் கலைக்கவில்லை. இயக்குனர் சந்திரசேகர் தொடங்கிய இயக்கம்தான் கலைக்கப்பட்டு உள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. வி  மக்கள் இயக்கம் கலைப்பு என்ற செய்தியால் குழம்பி போன நிர்வாகிகள், ரசிகர்கள் இதனால் நிம்மதி அடைந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு மூத்த பிரபலங்கள், அதிலும் தந்தை மகன் இப்படி மோதிக்கொண்டது இணையம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்போது அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாக சந்திரசேகர் கூறி இருப்பதால் இருவருக்கும் இடையிலான மோதல் முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்வதற்கு விஜய் விரும்புகிறார். அரசியலில் அவருக்கு ஆர்வம் இல்லை.மகனை முதலமைச்சராக்க வேண்டும் என்பது சந்திரசேகரனின் கனவு.தொடர்ந்து படங்கலில் நடிக்க வேண்டும். அவ்வப்போது மக்களுக்கு உதவ  வேன்டும் எனபதே விஜை யின் விருப்பம். அதற்காக தந்து ரசிகர்களின்  அரசியல் விருப்பத்துக்கு அனுமதியளித்துள்ளார்.

No comments: