Tuesday, October 12, 2021

விராட் கோலியை வெளியேற்றிய சுனில் ந‌ரேன்

சுனில் நரேனின் அற்புதமான பந்துவீச்சு, சூழலுக்கு தகுந்தார்போல் அதிரடியான துடுப்பாட்டம் ஆகியவற்றால் ஷார்ஜாவில்  நடந்த எலிமினேட்டர் சுற்றில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

நானயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கோலி  துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார்.முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு  அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்கள் சேர்த்தது. 139 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் 2-வது தகுதிச்சுற்றில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணியுடன் இன்று மோதுகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணி. இதில் வெல்லும் அணி சென்னையுடன்  அணியுடன் கோப்பைக்காக கோதாவில் மோதும்.

 பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக தேவ்தத் படிக்கல், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அணிக்கு நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். 18 பந்துகளை எதிர்கொண்டிருந்த படிக்கல் 5-வது ஓவரில் 21ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பெங்களூரு அணி 49 ஓட்டங்களில் தனது முதல் விக்கெட்டை இழந்தது. அதனையடுத்து, அணியின் சரிவு தொடங்கியது.


  ஸ்ரீகர் பரத் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, விராட் கோலி 33 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சுனில் நரேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பெங்களூரு 12 ஓவரில் 88 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கோலியைத் தொடர்ந்து ஏபி டிவில்லியர்ஸும் 11 ஓட்டங்களில் நரேன் பந்துவீச்சில் கோலியைப் போலவே ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல்லும் சுனில் நரேன் பந்துவீச்சில் 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். முக்கியமான மூன்று வீரர்களை சுனில் நரேனின் பந்து வீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.

கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் பெங்களூரு அணி வீரர்கள் தடுமாறினர். 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் 4 ஓவர்கள் வீசிய சுனில் நரேன் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஃபெர்குசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.   கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ஷூப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். ஷப்மன் கில் 18 பந்துகளில் 29 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய திரிபாதி 6 ஓட்டங்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மறுபுறம் நிதானமாக ஆடிவந்த வெங்கடேஷ் ஐயர் 26 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, நிதிஷ் ராணா 23 ஓட்டங்களும், சுனில் நரேன் 26 ஓட்டங்களும் எடுத்து அணியின் எண்ணிக்கையை  உயர்த்தினர். இறுதி ஓவரில் 7 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இயான் மோர்கன், ஷகிப் அல் ஹசன் களத்தில் இருந்தனர். இறுதிஓவரை டேனியல் கிறிஸ்டியன் வீசினர்.

அவருடைய முதல் பந்தை எதிர்கொண்ட ஹசன் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து நெருக்கடியைக் கொடுத்தார். அதனையடுத்து, வந்த மூன்று பந்துகளுக்கு ஒவ்வொரு ஓட்டங்களாக எடுத்த  மோர்கனும், ஹசனும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். அதன்மூலம் ப்ளேஆப் சுற்றின் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது கொல்கத்தா அணி. பெங்களூரு அணி .பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது.

பெங்களூரு  அணிகடந்த இருதொடர்களிலும் ப்ளேஆஃப் சுற்றுக்குள் சென்றும் தோல்வியுடன் வெளியேறியது.  பெங்களூருக்கு கடந்த 10 ஆண்டுகளாக ப்டனாக இருந்தும் விராட் கோலியால் ஒரு கோப்பையைக்கூட வென்று கொடுக்க முடியவில்லை. சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த கேப்டன் கோலி என்பதில் ஐயமில்லை, ஆனால், எதையும் வெற்றியாக மாற்ற முடியவில்லை எனும் போது ஏதோ ஓர் இடத்தில் தவறு நேர்கிறது தெரிகிறது. கடந்த இரு சீசன்களிலும் ஆர்சிபி அணிக்கு சிறந்த வீரர்கள் அமைந்த போதிலும் கோப்பையை வெல்ல முடியாமல் போனது துரதிர்ஷ்டம்.


கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேன் மட்டும்தான். சுனில் நரேன் வீழ்த்திய 4 விக்கெட்டுகள், கிறிஸ்டியன் ஓவரில் அவர் அடித்த 3 சிக்ஸர்கள்தான் ஆட்டத்தின் போக்கையே கொல்கத்தா பக்கம் திருப்பியது. 4 விக்கெட்டுகள், 15 பந்துகளில் 26 ஓட்டங்கள் சேர்த்த சுனில் நரேனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

சுனில் நரேனுக்கு ஒத்துழைத்து வருண் சக்கரவர்த்தி, சஹிப் அல் ஹசன் இருவரும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். இதில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 20 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்தார் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும், தனது ஓவரில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவிடவில்லை, இதில் 7 டொட் பந்துகள் அடங்கும்

சஹிப் அல் ஹசன் 4 ஓவர்கள் வீசி 24 ஓட்டங்கள் கொடுத்தார் இதில் 6 டாட்பந்துகள் அடங்கும். இந்த 3 சுழற்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து 12 ஓவர்கள் வீசி ஒட்டுமொத்த பெங்களூரின் ரன்ரேட்டின் கடிவாளத்தையே கைக்குள் அடக்கிவிட்டனர். இந்த மூவரும் 12 ஓவர்கள் வீசி 65 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர், இதில் 24 டாட் பந்துகள் அடங்கும்.

9 ஓவர்களில் பெங்களூரு அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ஓட்டங்கள் சேர்த்திருந்து. ஆனால், 3 சுழற்பந்துவீச்சாளர்களும் பந்துவீச வந்தபின், 6 விக்கெட்டுகளை இழந்து 77  ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தது.


பெங்களூருவின் அணியில்ஆ றுதல் அளிக்கக்கூடியது ஹர்சல் படேல் இந்த சீசனில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி கடந்த 2013ம் ஆண்டு பிராவோவின் சாதனையை சமன் செய்துள்ளார். சஹல் 4 ஓவர்கள் வீசி 16 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ஹர்சல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முதல் சுற்றி்ல் ஃபார்மில் இல்லாத சஹல் 2-வது சுற்றில் ஃபார்முக்குத் திரும்பிவிட்டார். சிராஜ் 4 ஓவர்கள்வீசி 19 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

No comments: